செய்திகள்

ஜே.இ.இ. தேர்வில் புதிய சாதனை படைத்த உதய்ப்பூர் மாணவர்: லிம்கா புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்

Published On 2017-08-20 10:27 GMT   |   Update On 2017-08-20 10:27 GMT
ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வில் நூறு சதவீதம் மதிப்பெண்கள் பிடித்த உதய்ப்பூர் மாணவர் லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
புதுடெல்லி:

ஐ.ஐ.டி., எ.ன்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பி.இ., - பி.டெக்., போன்ற பொறியியல் படிப்பில் சேர்வதற்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தும், ஜாயிண்ட் எண்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன் (ஜே.இ.இ.) பிரதான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வில் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரைச் சேர்ந்த மாணவர் கல்பீட் வீர்வால் 360-க்கு 360 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வில் நூறு சதவீதம் மதிப்பெண்கள் எடுப்பது இதுவே முதல் முறை ஆகும்.

மாணவர் வீர்வாலின் சாதனை லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. 2018-ம் ஆண்டு வெளியாக உள்ள லிம்கா புத்தகத்தின் கல்வி துறை சாதனை பிரிவில் இது இடம்பெறும். 

வீர்வால் தற்போது மும்பை ஐ.ஐ.டி.யில் கணினி அறிவியல் பயின்று வருகின்றார். வீர்வாலின் தந்தை புஷ்பேந்திரா மகரானா ராஜஸ்தானில் உள்ள பூபால் அரசு மருத்துவமனையில் செவிலியராகவும், தாய் புஷ்பா அரசு பள்ளி ஆசிரியராகவும் உள்ளனர்.

லிம்கா சாதனைகள் புத்தகம் இந்தியாவிலிருந்து தொகுக்கப்படும் ஓர் சாதனைகள் புத்தகமாகும். 1990ஆம் ஆண்டு முதல் புத்தகத்தொகுப்பு வெளியானது. 


Tags:    

Similar News