செய்திகள்

கேரளா: 2019-ம் ஆண்டுக்குள் தனது தொண்டர்களை 9 லட்சமாக்க ஆர்.எஸ்.எஸ். முடிவு

Published On 2017-08-20 07:53 GMT   |   Update On 2017-08-20 07:54 GMT
கேரளாவில் உள்ள தனது தொண்டர்கள் எண்ணிக்கையை வரும் 2019-ஆம் ஆண்டுக்குள் 9 லட்சமாக அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் இடதுசாரி தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கும் இடையே அடிக்கடி சச்சரவு நடப்பது வழக்கம். சில நேரங்களில் வன்முறையில் முடிந்து வருகிறது.

இந்நிலையில், கேரளா மாநிலத்தில் தனது அமைப்பை வலுப்படுத்தும் வகையில் தொண்டர்கள் எண்ணிக்கையை 9 லட்சமாக அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் நந்தகுமார் கூறுகையில், 'கடந்த சில ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் அமைப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அமைப்பை வலுப்படுத்தினால் தான் எங்களால் உற்சாகமாக வேலை செய்யமுடியும். எனவே, வரும் 2019-ஆம் ஆண்டுக்குள் எங்கள் தொண்டர்கள் எண்ணிக்கையை 9 லட்சமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.

கேரளாவில் இப்போது சுமார் 50,000 ஷாகாக்கள் நடைபெற்று வருகிறது. இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தேசிய அளவில் புகழ்பெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேருவதை இளைஞர்கள் பெருமிதமாக கருதுகிறார்கள்.

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களை சிலர் திட்டமிட்டு கொலை செய்து வருகின்றனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒட்டுமொத்த கேரளாவின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறது' என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News