செய்திகள்

விமானங்களில் உணவு திருடினால் உடனடி சஸ்பெண்ட்: ஏர் இந்தியா தலைவர் அதிரடி

Published On 2017-08-11 15:42 GMT   |   Update On 2017-08-11 15:42 GMT
ஏர் இந்தியா விமானங்களில் உணவு திருடினால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

ஏர் இந்தியா நிறுவனம் வெளிநாடுகள் மற்றும் உள் நாடுகளுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. விமான பயணம் முடிந்ததும் விமான நிலையத்தில் அடுத்த பயணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற தொடங்கும்.

அப்போது விமான நிறுவன ஊழியர்களான சுத்தப்படுத்துபவர்கள், பாதுகாப்பு படை வீரர்கள், என்ஜினியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் விமானத்தில் ஏறி அடுத்த பயணத்துக்கு தயார் செய்வார்கள். அவர்களில் சிலர் விமானத்தில் மீதமுள்ள டீ, காபி, சாக்லெட் போன்ற உணவு பொருள்களை சாப்பிட்டு வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவன தலைவர் அஷ்வனி லோஹானி, விமானத்தில் உணவு பொருள்களை சாப்பிடுபவர்கள் சோதனையில் கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “விமானத்தில் உள்ள உணவு பொருள்களை ஊழியர்கள் தங்களது சொந்த பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்வது குற்றமாக கருதப்படும். எனவே, அதிகாரிகள் நடத்தும் சோதனையின்போது, ஊழியர்கள் யாராவது உணவு பொருளை எடுப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள்’’ என தெரிவித்துள்ளார்.

’இது முதல் முறையாக நடப்பதல்ல, இதுபோல் பலமுறை நடந்துள்ளது. எனவே, இப்போது பிறப்பித்த உத்தரவை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்’ என விமான நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News