செய்திகள்

சீன சாப்ட்வேர் மூலம் ஏ.டி.எம்.களை ‘ஹேக்கிங்’ செய்து பணம் கொள்ளை

Published On 2017-08-08 12:15 GMT   |   Update On 2017-08-08 12:15 GMT
மத்திய பிரதேச மாநிலத்தில் ஏ.டி.எம். எந்திரங்களை சீன சாப்ட்வேர் மூலம் ‘ஹேக்கிங்’ செய்து நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குவாலியர்:

ஏ.டி.எம்.களை உடைத்து கொள்ளையடிப்பது அல்லது அடுத்தவர் கணக்குக்குள் நுழைந்து ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுப்பது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

ஆனால், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் சமீபத்தில் ஏ.டி.எம்.களில் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

அதாவது ஏ.டி.எம். எந்திரத்துக்குள் இருக்கும் பணத்தை அந்த எந்திரமே தானாக வெளியே தள்ள வைத்து அதன் மூலம் பணத்தை கொள்ளையடித்து இருந்தனர்.

இது சம்பந்தமாக போலீசில் புகார் செய்யப்பட்டு இருந்தது. ஏ.டி.எம். எந்திரம் எப்படி தானாக பணத்தை வெளியேற்றியது என்பது தெரியாமல் வங்கி அதிகாரிகளும், போலீசாரும் திகைத்தனர்.

இந்த நிலையில் போலீசார் கொள்ளை தொடர்பாக துப்பு துலக்கினார்கள். அந்த பகுதியை சேர்ந்த அஜய் சவுத்ரி, சாகித் குரேஷி ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் ஏ.டி.எம்.மில் எப்படி கொள்ளையடித்தோம் என்பது பற்றி போலீசாரிடம் விளக்கினார்கள்.

ஏ.டி.எம். எந்திரத்தின் செயல்பாட்டையே ஹேக்கிங் மூலம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பணத்தை வெளியேற செய்ததாக கூறினார்கள்.

இதற்காக சீனாவில் உருவாக்கப்பட்ட சாப்ட்வேரை பயன்படுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஹேக்கிங் முறையில் ஏ.டி.எம்.களில் கொள்ளை நடந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

எனவே, வங்கிகள் வட்டாரத்தில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற கொள்ளைகளை தடுப்பதற்கு என்ன செய்யலாம்? என ஆலோசித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News