செய்திகள்

பஞ்சாப்: வாகா எல்லையில் பாதுகாப்பு படையினருடன் ரக்‌ஷாபந்தன் கொண்டாடிய மாணவிகள்

Published On 2017-08-04 07:49 GMT   |   Update On 2017-08-04 07:49 GMT
பஞ்சாப் மாநிலத்தின் வாகா எல்லையில் பணியில் ஈடுபட்டுள்ள எல்லை பாதுகாப்பு படைவீரர்களுக்கு பள்ளி மாணவிகள் ராக்கி அணிவித்து ரக்‌ஷாபந்தன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அமிர்தசரஸ்:

இந்தியாவின் வட மாநிலங்களில் ரக்‌ஷாபந்தன் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த நாளில் தனது சகோதரன் நலமுடன் வாழவேண்டும் என்பதை வலியுறுத்தி அவருடன் பிறந்த சகோதரிகள் ராக்கி கட்டி விடுவார்கள். ராக்கி கட்டிய சகோதரிகளுக்கு, அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்து சகோதரர்கள் மகிழ்வார்கள். இதற்கிடையே, வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி ரக்‌ஷாபந்தன் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள வாகா எல்லையில் பள்ளி மாணவிகள் நூற்றுக்கணக்கில் ஒன்றுகூடினர். அவர்கள் வாகா எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படைவீரர்களுக்கு வணக்கம் தெரிவித்தனர்.



அதன்பின் அவர்களின் நெற்றியில் திலகம் அணிவித்தனர். அதை தொடர்ந்து, அவர்களின் கைகளில் பல்வேறு வண்ண நிறத்திலான ராக்கிகளை கட்டி மகிழ்ந்தனர். ராக்கி கட்டிய மாணவிகளுக்கு படைவீரர்கள் நன்றி தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து, வாகா எல்லையில் நடந்த கொடி இறக்கும் நிகழ்ச்சியை மாணவிகள் கண்டு களித்தனர். வாகா எல்லையில் இரு நாட்டு படைவீரர்களும் அவர்களது தாய்நாட்டு கோஷங்களை முழக்கியபடி உணர்ச்சிப் பெருக்குடன் கொடி இறக்கும் நிகழ்ச்சியை கண்டு மாணவிகள் மெய்சிலிர்த்து நின்றது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News