செய்திகள்

நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா ராஜினாமா

Published On 2017-08-01 14:31 GMT   |   Update On 2017-08-01 14:31 GMT
நிதி ஆயோக் அமைப்பின் முதல் துணைத்தலைவரான அரவிந்த் பனகாரியா, தனது பதவியில் இருந்து விலக உள்ளார். தன்னை விடுவிக்கும்படி அவர் பிரதமரிடம் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் திட்டக் குழுவுக்கு மாற்றாக 2015-ம் ஆண்டு நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்றார். துணைத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய-அமெரிக்கரான பொருளாதார நிபுணர் அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டார்.

நிதி ஆயோக் அமைப்பின் பணிகளை கவனித்து வந்த அரவிந்த் பனகாரியா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார், தன்னை பணியில் இருந்து ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் விடுவித்துவிடுங்கள் என கேட்டுக் கொண்டு உள்ளார். கொலம்பிய பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக இருக்கும் பனகாரியா, சர்வதேச மற்றும் பொது விவகார துறையின் இந்திய அரசியல் பொருளாதாரத்தின் பேராசிரியராகவும் உள்ளார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இருந்து கூடுதல் காலம் விடுமுறை கிடைக்கவில்லை என்பதால் விடுவிக்குமாறு அரவிந்த் பனகாரியா கேட்டுக்கொண்டு உள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் பனகரியா, “கொலம்பியா பல்கலைக்கழகம் எனக்கு கூடுதல் காலம் விடுமுறை அளிக்கவில்லை, நிதி ஆயோக்கில் இருந்து ஆகஸ்ட் 31 விலகுகின்றேன்,” என குறிப்பிட்டு உள்ளார்.

நிதி ஆயோக்கின் தலைவரான பிரதமர் மோடியிடம் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துவிட்டதாகவும் அரவிந்த் பனகாரியா கூறியுள்ளார்.

கொலம்பியா பல்கலைக்கழகம் அவருக்கு வழங்கிய விடுமுறை காலம் 2 ஆண்டுகள். விடுமுறையை நீட்டிக்காததால் நிதி ஆயோக் துணைத்தலைவர் பதவியில் இருந்து விடுவித்துக்கொள்ளும் பனகாரியா, செப்டம்பர் மாதம் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

பனகாரியா விலகலைத் தொடர்ந்து, நிதி ஆயோக்கின் புதிய துணைத்தலைவர் யார்? என்பது விரைவில் அறிவிக்கப்படும்.
Tags:    

Similar News