செய்திகள்

மக்களவையில் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது: வீடியோ எடுத்த அனுராக் தாகூருக்கு சபாநாயகர் எச்சரிக்கை

Published On 2017-07-26 10:49 GMT   |   Update On 2017-07-26 10:49 GMT
பாராளுமன்றத்தின் மக்களவையில் மொபைல் போன் பயன்படுத்த அனுமதி இல்லை. எனவே இதுபோன்ற நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபடக் கூடாது என பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூருக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மக்களவையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் மீது பேப்பர்களை கிழித்து எறிந்த 6 காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு, 5 நாட்கள் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.

இதையடுத்து, சபாநாயகரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் காங்கிரசாரின் நடவடிக்கைகளை, பா.ஜ.க. உறுப்பினர் அனுராக் தாகூர் தனது மொபைல் போனில் படம்பிடித்துக் கொண்டிருந்தார்.

அவரது நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பாக, காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், “ஏற்கனவே ஆம் ஆத்மி எம்.பி பகவத் மான் பாராளுமன்ற வளாகத்துக்கு வந்ததை தனது மொபைல் போனில் படம்பிடித்து வெளியிட்டதற்காக அவை நடவடிக்கைகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால், மக்களவையில் மொபைலில் படம் பிடித்த அனுராக் தாகூர் மீது எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கப்படவில்லை?’’ என கேள்வி எழுப்பினார்.



இந்நிலையில், இன்று காலை மக்களவை கூடியதும் பா.ஜ.க. உறுப்பினர் அனுராக் தாகூர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், “அவையில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது. அதை மீறிய நீங்கள் அவை உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ எனக் கூறினார்.

அவரை தொடர்ந்து பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் எழுந்து நின்று, “நான் அவையில் மொபைல் போன் பயன்படுத்தியதால் யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

இதைதொடர்ந்து பேசிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், இதுபோன்ற நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபடக்கூடாது என அனுராக் தாகூருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News