செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். நெருக்கடி - என்.சி.இ.ஆர்.டி புத்தகத்தில் இருந்து தாகூர் படைப்புகள் நீக்கமா?: பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்

Published On 2017-07-26 00:39 GMT   |   Update On 2017-07-26 00:39 GMT
என்.சி.இ.ஆர்.டி புத்தகத்தில் இருந்து தாகூர் படைப்புகளை நீக்கும் எண்ணமில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:

என்.சி.இ.ஆர்.டி-யின் அனைத்து பாடப் புத்தகங்களில் இருந்து தாகூர் படைப்புகளை நீக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் கல்விப் பிரிவின் முன்னாள் தலைவர் தினா நாத் தலைமையின் கீழ் இயங்கும் ஷிக்‌ஷா சங்ஸ்கிரிதி உத்தன் நியாஸ் வலியுறுத்தி இருந்தது.

மேலும், பஞ்சாப் கவிஞர் பஷ், ஓவியர் எம்.எஃப்.ஹூசைன் ஆகிய சிலரது படைப்புகளையும் நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.



இந்நிலையில், என்.சி.இ.ஆர்.டி புத்தகத்தில் இருந்து தாகூர் படைப்புகளை நீக்கும் எண்ணமில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. ஓ பிரையான் எழுப்பிய கேள்விகளுக்கு பிரகாஷ் ஜவடேகர் இந்த விளக்கத்தை அளித்தார்.

ஜவடேகர் பேசுகையில், “நாட்டின் சுதந்திரம், கலாச்சாரம், இலக்கியம் ஆகியவற்றிற்காக பாடுபட்ட தாகூர் உள்ளிட்டோரை நாங்கள் மதிக்கிறோம். அவர்கள் நாட்டை பெருமை கொள்ள வைத்துள்ளார்கள். அதனால் அவர்களின் படைப்புகளை நீக்கும் எண்ணமில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

முன்னதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோரிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
Tags:    

Similar News