செய்திகள்

கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் இல்லை: டெல்லியில் ஈராக் மந்திரி பகீர் தகவல்

Published On 2017-07-24 12:14 GMT   |   Update On 2017-07-24 12:14 GMT
ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை என டெல்லி வந்துள்ள ஈராக் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

சிரியா நாட்டின் எல்லையோரம் உள்ள ஈராக்கின் மொசூல் நகரை மூன்றாண்டுகளுக்கு முன்னர் கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கிருக்கும் கிறிஸ்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்களை ஊரை விட்டு அடித்து விரட்டி விட்டு இஸ்லாமிய அரசை அமைத்துள்ளதாக அறிவித்தனர்.

அவர்களை அங்கிருந்து விரட்டுவதற்காக ஈராக் ராணுவம் சில மாதங்களாக நடத்திய உச்சகட்ட தாக்குதலின் விளைவாக மோசூல் நகரம் மீண்டும் அரசின் வசமாகியுள்ளது.

இதற்கிடையில், கடந்த 2014-ம் ஆண்டு பெட்ரோல் கிணறு கட்டுமானப் பணிகளுக்காக வேலை பார்த்து வந்த இந்தியர்கள் 39 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்தி சென்றிருந்தனர். கடத்தப்பட்டவர்கள் என்ன ஆனார்கள்? என்ற தகவல் தெரியாமல் அவர்களின் குடும்பத்தார் திண்டாடி வருகின்றனர்.

மோசூல் நகரம் முழுவதும் இதுவரை தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்து வந்ததால் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்பதில் பின்னடைவு ஏற்பட்டது.

மோசூல் நகரம் மீண்டும் அரசின் வசம் வந்துள்ளதற்கு இந்தியா பாராட்டு தெரிவித்தது. அங்கு கடத்தப்பட்ட இந்தியர்களை உடனடியாக தேடி கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு இந்திய அரசு மீண்டும் கேட்டுக் கொண்டது. இதற்கு தேவையான ஒத்துழைப்பை அளிக்க தயாராக இருப்பதாக ஈராக் அரசும் வாக்குறுதி தந்தது. இதற்கான ஏற்பாடுகளை விரைவுப்படுத்தும் நோக்கத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே. சிங் சமீபத்தில் ஈராக் சென்றார்.

இந்நிலையில், ஈராக் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் இப்ராஹிம் அல்-எஷைக்கர் அல்-ஜாப்ரி 5 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார்.

டெல்லியில் மத்திய பெட்ரோலியம் துறை மந்திரி தர்மேந்திர பிரதான்-ஐ டாக்டர் இப்ராஹிம் சந்தித்துப் பேசினார். அப்போது ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் உயிருடன் உள்ளார்களா?, இல்லையா? என்பதற்கு தேவையான போதிய ஆதாரம் தங்கள் நாட்டு அரசிடம் இல்ல என அவர் குறிப்பிட்டார்.

துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரியையும் இன்று சந்தித்துப் பேசிய ஈராக் மந்திரியின் இந்த பகீர் தகவல் 39 இந்தியர்களின் குடும்பத்தார்களின் உள்ளங்களில் தீமூட்டும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News