செய்திகள்

காஷ்மீரில் இணைய வேகம் குறைப்பு: 4G மற்றும் 3G சேவைகள் ரத்து

Published On 2017-06-25 03:05 GMT   |   Update On 2017-06-25 03:05 GMT
நாட்டிற்கு எதிரான கருத்துக்கள் மற்றும் வதந்திகள் பரப்பப்படுவதாக கூறி காஷ்மீர் முழுவதும் இணையதள வேகத்தை குறைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல நகரங்களில் நாட்டிற்கு எதிரான பல கருத்துக்கள் இணையதளம் வழியாக பரப்பப்படுகிறது. மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வதந்திகளும் பரப்பப்படுகிறது. இதனால், அங்கு எப்போதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

குறிப்பாக, கலவரக்காரர்களை பாதுகாப்பு படையினர் விரட்டும் பழைய வீடியோ காட்சிகளை பிரிவினைவாதிகள் புதியது போல எடிட் செய்து பேஸ்புக், வாட்ஸப் என சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இதனை தடுப்பதற்காக அங்கு இணைய வேகத்தை குறைக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, காஷ்மீர் முழுவதும் இணையதள வேகம் வினாடிக்கு 128 கிலோ பைட்ஸ் என்ற வேகத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது. மேலும்,  4G மற்றும் 3G சேவைகள் 2G -ஆக குறைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Tags:    

Similar News