செய்திகள்

கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஏர் இந்தியா: வாங்க முயற்சிக்கும் டாடா குழுமம்

Published On 2017-06-21 16:56 GMT   |   Update On 2017-06-21 17:06 GMT
சுமார் ரூ.52000 கோடி கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகளை வாங்க டாடா குழுமம் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை:

சுமார் ரூ.52000 கோடி கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகளை வாங்க டாடா குழுமம் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் முதல்முறையாக விமான சேவை நிறுவனத்தை டாடா குழுமம் தான் தொடங்கியது. பின்னர் 1953-ம் ஆண்டில் மத்திய அரசால் அந்நிறுவனம் கையகப்படுத்தப்பட்டு, ஏர் இந்தியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நாட்டின் மூன்றாவது பெரிய விமான நிறுவனமாக உள்ள ஏர் இந்தியா, தற்போது கடும் நஷ்டத்தில் இயங்கிவருகிறது.

சுமார் 52000 கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதால், இந்நிறுவனத்தை மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில், ஏர் இந்தியாவில் மத்திய அரசின் வசமுள்ள 51 சதவிகித பங்குகளை வாங்க டாடா குழுமம் முயற்சி செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் தலைமையிலான குழு மத்திய அரசிடம் இது தொடர்பாக நடத்தி வரும் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏர் இந்தியா நிறுவனத்தை, ரூ.30,000 கோடி விலையில், டாடா குழுமம் வாங்கும் என்று, நிதியமைச்சக வட்டாரங்கள் மதிப்பீடு தெரிவிக்கின்றன. மேலும், இந்த ஒப்பந்தத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாகவும் நிதியமைச்சகம் தரப்பில் குறிப்பிடப்படுகிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடன் இணைந்து, ஏர் இந்தியாவை வாங்க திட்டமிட்டுள்ள டாடா குழுமம், பட்ஜெட் விமான சேவையை விரிவுபடுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News