செய்திகள்

பஞ்சாப்: போதை மருந்து கடத்தல் கும்பலுடன் கனெக்‌ஷன் - போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

Published On 2017-06-13 05:45 GMT   |   Update On 2017-06-13 05:45 GMT
பஞ்சாப் மாநிலத்தில் போதை மருந்து கும்பலுடன் தொடர்பிலிருந்து, தனது வீட்டில் ஆயுதங்கள் மற்றும் வெளிநாட்டு கரன்சி பதுக்கி வைத்திருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரஜித் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநில காவல்துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் இந்திரஜித் சிங், போதை மருந்து கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக அம்மாநில காவல்துறை உயரதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஜலந்தரில் உள்ள அவரது வீட்டில் போதை மருந்து கடத்தல் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையின் போது இந்திரஜித் வீட்டில் குவியல், குவியலாக ஆயுதங்கள், வெளிநாட்டு, உள்நாட்டு கரன்சிகள் மற்றும் போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து, இந்திரஜித்தை போதை மருந்து கடத்தல் தடுப்பு போலீசார் கைது செய்தனர்.

அவரது வீட்டில் ஏ.கே-47, இத்தாலி நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள், ரிவால்வர், 16.50 லட்சம் இந்திய ரூபாய், 3550 பிரிட்டன் பவுண்ட், 7 கிலோ போதை பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் இந்திரஜித் சிங்கிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
Tags:    

Similar News