செய்திகள்

இந்திய பங்குச்சந்தைகள் புதிய சாதனை: 31000 புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ்

Published On 2017-05-26 10:10 GMT   |   Update On 2017-05-26 10:11 GMT
பங்குச்சந்தையில் சென்செக்ஸ் இன்று முதல் முறையாக 31000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதேபோல் நிப்டி 9600 புள்ளிகளை தாண்டியது.
மும்பை:

இந்திய பங்குச்சந்தைகளில் இன்று வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. குறிப்பாக முன்னணி நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் கைமாறின. இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் முதல் முறையாக 31000 புள்ளிகளை தொட்டது.

நேற்று அதிகபட்சமாக 30,793 புள்ளிகள் என்று உச்சத்தில் இருந்த நிலையில், இன்று பிற்பகல் நிலவரப்படி சென்செக்ஸ் 31,033 புள்ளிகள் என்ற நிலையில் இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 82 புள்ளிகள் உயர்ந்து 9592 புள்ளிகளில் வர்த்தகம் தொடர்ந்தது. அதன்பின்னர் மேலும் உயர்ந்து, 9600 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டியது.

மும்பை பங்குச்சந்தையில் 1664 நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்தது. 715 நிறுவன பங்குகள் சரிந்தன. 135 நிறுவனங்களின் பங்குகளில் எந்த மாற்றமும் இல்லை.



இதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி சென்செக்ஸ் 30 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் ஆனது. அதன்பின்னர் சந்தைகள் ஏற்ற இறக்கங்களை சந்தித்த நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஜூன் மாதத்திற்கான டெரிவேட்டிவ் சென்டிமென்ட் காரணமாக பங்குகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலை தொடரும்பட்சத்தில், இந்த ஆண்டின் இறுதியில் சென்செக்ஸ் 34,000-35,000 என்ற அளவிலும், மார்ச் 2018ல் 37000 புள்ளிகளாகவும் உயர வாய்ப்பு உள்ளது என ஐடிபிஐ கேபிட்டல் ஆராய்ச்சி பிரிவின் தலைவர் ஏ.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News