செய்திகள்

கருணை மதிப்பெண் விவகாரம்: சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம்

Published On 2017-05-24 09:42 GMT   |   Update On 2017-05-24 09:42 GMT
சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வில் கடினமான கேள்விகளுக்கு வழங்கப்படும் கருணை மதிப்பெண்ணை வழங்கும்படி டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டிருப்பதால், தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி:

சி.பி.எஸ்.இ. ‘பிளஸ்-2’ தேர்வை நாடு முழுவதும் 10.98 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதி இருந்தனர். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 19-ந்தேதி வெளியிடப்படும் என்ற நிலையில் தள்ளிவைக்கப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகாது என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

கடினமான கேள்விகளுக்கு வழங்கப்படும் கருணை மதிப்பெண்ணை சி.பி.எஸ்.இ. கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. டெல்லி ஐகோர்ட்டிலும் வழக்கும் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு சி.பி.எஸ்.இ. அறிவிப்பை ரத்து செய்ததுடன் கருணை மதிப்பெண்ணை வழங்கவும் நேற்று உத்தரவிட்டது.

கோர்ட்டு உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பாக சி.பி.எஸ்.இ. இன்று ஆலோசனை நடத்தியது. அதன் இயக்குனர் சதுர்வேதி மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பேசுகிறார்.

இதனால் எதிர்பார்த்தபடி சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகவில்லை. அடுத்த வாரத்தில் முடிவு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News