செய்திகள்

கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு: ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் அருண்ஜெட்லி

Published On 2017-05-22 10:45 GMT   |   Update On 2017-05-22 10:45 GMT
கெஜ்ரிவால் மீது மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என கேட்டுள்ளார்.
புதுடெல்லி:

டெல்லி கிரிக்கெட் வாரியத்தில் மத்திய மந்திரி அருண் ஜெட்லி முறைகேட்டில் ஈடுபட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சில ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம்சாட்டினர். இதனால், அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் 5 ஆம் ஆத்மி தலைவர்கள் மீது அருண் ஜெட்லி, ரூ.10 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்காக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கடந்த 17-ந்தேதி, டெல்லி ஐகோர்ட்டில் ஆஜர் ஆனார். அப்போது அவருக்கும், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் வக்கீல் ராம்ஜெத்மலானிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. குறுக்கு விசாரணையின்போது அருண் ஜெட்லியை தரக்குறைவாக ராம்ஜெத்மலானி விமர்சித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.



இந்த நிலையில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கூறி கெஜ்ரிவால் மீது அருண்ஜெட்லி புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தன்னை அவதூறாகப் பேசியதற்கு ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடும்படி ஜெட்லி கூறியுள்ளார். ஜெட்லியின் இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News