செய்திகள்

கட்சியை விட்டு யாரும் போகவேண்டாம்: எம்.எல்.ஏ.க்களுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்

Published On 2017-04-27 14:42 GMT   |   Update On 2017-04-27 14:42 GMT
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமை மீது நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், கட்சியைவிட்டு யாரும் போக வேண்டாம் என எம்.எல்.ஏ.க்களுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி மாநகராட்சித் தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. இதனால், கட்சி நிர்வாகிகள் சிலர் ஒவ்வொருவராக விலகத் தொடங்கி உள்ளனர். சில எம்.எல்.ஏ.க்கள் கூட விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஆலோசனை கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது:

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை வாங்க பா.ஜ.க. முயற்ச்சிக்கிறது. அவர்கள் 10 கோடி ரூபாய் கூட வழங்க முன்வரலாம் அவர்களிடம் நீங்கள் விலைபோகக்கூடாது. நீங்கள் எங்களை ஏமாற்றுவது என்பது கடவுளை ஏமாற்றுவதற்கு சமம். கட்சியை விட்டு விலகமாட்டேன் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த புனிதமான கட்சியை விட்டு போய்விட்டால், வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டீர்கள்

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரையும் எழுந்து நிற்கும்படி கூறிய கெஜ்ரிவால், அனைவரும் இன்று மனதார ஒரு உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்றார்.

‘கடவுள் மீது ஆணையாக, ஒருபோதும் எனது புனிதமாக கட்சியை கைவிடமாட்டேன், கட்சிக்கு துரோகம் செய்யமாட்டேன்’ என்ற உறுதி மொழியை கெஜ்ரிவால் வாசிக்க, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் அதனை கூறி சத்தியப்பிரமாணம் செய்தனர்.

Similar News