செய்திகள்
செம்மரம் கடத்தியதாக கைதானவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளையும் படத்தில் காணலாம்.

சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 24 பேர் கைது

Published On 2017-04-27 04:36 GMT   |   Update On 2017-04-27 04:36 GMT
சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தைச் சேர்ந்த 24 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் இருந்து காரும், செம்மரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பதி:

கடப்பா மாவட்டம் மைதுகூர் பகுதியில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் சிறப்புக்காவல் படை போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சேஷாசலம் வனப்பகுதியில் 24 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை வெட்டி தலையில் தூக்கிச் சென்றனர். அந்தக் கும்பலை சரண் அடையும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், அந்தக் கும்பல் செம்மரக்கட்டைகளை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினர். அவர்களை விரட்டிச் சென்ற போலீசார், அனைவரையும் பிடித்தனர்.

பிடிபட்டவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்களின் பெயர் விவரம் தெரியவில்லை. அவர்களிடம் இருந்து 24 செம்மரக்கட்டைகளும், ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்...

திருப்பதி அடுத்த சந்திரகிரி சேஷாசலம் வனப்பகுதியில் சிறப்புக்காவல் படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கே.எம்.எம்.கல்லூரி அருகே எர்ரகுட்டா பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகளை வெட்டி 11 பேர் கொண்ட கும்பல் தலைசுமையாக நரசிங்காபுரம் ரெயில்வே மேம்பாலம் பகுதிக்கு தூக்கிச்சென்றனர்.

அப்போது அப்பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்ட சிறப்புக்காவல் படை போலீசார், அந்தக் கும்பலை மடக்கினர். அந்த நேரத்தில் செம்மரக்கட்டைகளை கீழே போட்டு விட்டு, கும்பல் தப்பி ஓடி விட்டனர். கும்பல் விட்டுச் சென்ற 11 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, சந்திரகிரி வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


செம்மரம் கடத்தியதாக கைதானவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளையும் படத்தில் காணலாம்.

Similar News