செய்திகள்

கேரள மந்திரி பதவி விலகும் வரை போராட்டம் நடத்தப்படும்: உம்மன்சாண்டி பேச்சு

Published On 2017-04-27 01:25 GMT   |   Update On 2017-04-27 01:25 GMT
பெண்கள் பற்றி இழிவாக பேசிய கேரள மந்திரி எம்.எம்.மணி பதவி விலகும் வரை போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி பேசினார்.
மூணாறு:

கேரள மின்சாரத்துறை மந்திரியாக இருப்பவர் எம்.எம்.மணி. இவர், மூணாறில் நடந்த பொதுக்கூட்டத்தில், தேயிலை தோட்ட பெண் தொழிலாளர்கள் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பெண்கள் உரிமை சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் இறங்கின. பெண்களை அவதூறாக பேசிய மந்திரி எம்.எம்.மணி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள் அமைப்பினரும் மூணாறில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.


இந்த நிலையில் பெண்களை அவதூறாக பேசிய மந்திரி பதவி விலகக்கோரியும், மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கூட்டணி கட்சி சார்பில் மூணாறில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மூணாறில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் நடத்திய பெண் தோட்ட தொழிலாளர்களை அவதூறாக மந்திரி எம்.எம்.மணி பேசியுள்ளார். பெண்களை அவமதிக்கும் ரீதியில் பேசிய மந்திரி, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா தலைமையில் நடந்த காங்கிரஸ் கூட்டணி கட்சி கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

பெண்கள் குறித்து இழிவாக பேசிய மந்திரிக்கு, அவர்கள் கட்சியை சேர்ந்தவர்களே கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் முதல்-மந்திரி பினராயி விஜயன் மட்டும் அவரை ஆதரிக்கிறார். மந்திரிக்கு எதிராக சட்டமன்றத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் எதிர்ப்புகளை கூறியபோது, முதல்-மந்திரி பினராயி விஜயன் அவருக்கு ஆதரவாகவே பேசுகிறார்.

மந்திரி பதவி விலகக்கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டம் நடத்தப்படும். எம்.எம்.மணி மந்திரி பதவியில் இருப்பது கேரளத்துக்கு அவமானம். பெண்களை அவமதித்த அவர், பதவியில் இருக்கக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார். 

Similar News