செய்திகள்

விவசாய வருமானத்துக்கு வரி விதிக்கும் திட்டம் இல்லை - நிதி மந்திரி அருண்ஜெட்லி உறுதி

Published On 2017-04-26 21:06 GMT   |   Update On 2017-04-26 21:06 GMT
விவசாய வருமானத்துக்கு வரி விதிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறினார்.
புதுடெல்லி:

விவசாய வருமானத்துக்கு வரி விதிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறினார்.

‘நிதி ஆயோக்’ உறுப்பினர் பிபேக் தேப்ராய் நேற்று முன்தினம் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், “கிராமங்களில் வசிக்கும் வசதி படைத்தோர் தங்களுக்கு விவசாயம் மூலம் வருமானம் கிடைத்தது என்று கூறி வரியே செலுத்துவதே இல்லை. அவர்களது வருமானத்துக்கு வரி விதிக்கப்படுவதும் கிடையாது. இதனால் வரி ஏய்ப்பு நடக்கிறது. எனவே விவசாயம் மூலம் அதிக வருமானம் ஈட்டும் தனி நபர்களுக்கு வரி விதிக்க நிதி ஆயோக்கில் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் வரிசெலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து நிதி ஆயோக் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில் பிபேக் தேப்ராயின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிக்கையில், “கடந்த 23-ந்தேதி நடந்த நிதி ஆயோக் ஆட்சி மன்ற கூட்டத்தில் வரைவு திட்டங்களில் இதுபோன்ற பரிந்துரை எதுவும் வைக்கப்படவில்லை. எதுவும் சுற்றறிக்கையாக விடப்படவும் இல்லை. பிபேக் தேப்ராய் தெரிவித்தது அவருடைய சொந்த கருத்து” என்று கூறப்பட்டு இருந்தது.

பிபேக் தேப்ராயின் கருத்தை மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியும் முற்றிலுமாக நிராகரித்தார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

நிதி ஆயோக் ஆட்சி மன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட ‘விவசாய வருமானத்தின் மீது வருமான வரி’ என்ற தலைப்பிலான அறிக்கையை முழுவதுமாக படித்தேன். அது தொடர்பாக எழுந்துள்ள குழப்பத்தை தீர்க்கும் விதமாக இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.

விவசாய வருமானத்துக்கு வரி விதிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்து கொள்கிறேன். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி விவசாய வருமானத்தின் மீது வரி விதிப்பதற்கு மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News