செய்திகள்

2-வது தடவை ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜிக்கு இடது சாரிகள் ஆதரவு

Published On 2017-04-26 08:19 GMT   |   Update On 2017-04-26 08:19 GMT
ஜனாதிபதி பதவிக்கு பிரணாப் முகர்ஜியை 2-வது முறையாக நிறுத்த இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
புதுடெல்லி:

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலை 25-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலளார் சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.

சரத்யாதவ், சரத்பவார் ஆகியோரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மீண்டும் நிறுத்தலாமா? என்ற யோசனையும் எதிர்கட்சிகள் இடையே உள்ளது.

பிரணாப் முகர்ஜியை 2-வது முறையாக ஜனாதிபதியாக நிறுத்த இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சமீபத்தில் யெச்சூரி சந்தித்து பேசிய போது இதை தெரிவித்து உள்ளார்.

அதே நேரத்தில் 2-வது முறையாக ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜிக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. அனைத்து கட்சிகளும் இணைந்து ஒருமித்த கருத்து ஏற்பட்டால் அவர் விருப்பம் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் ஆளும் பா.ஜனதா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. இதனால் அந்த கட்சி நிறுத்தும் வேட்பாளர்தான் வெற்றி பெறுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Similar News