செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம்: சோனியா காந்தி உடன் சரத் யாதவ் சந்திப்பு

Published On 2017-04-25 22:56 GMT   |   Update On 2017-04-25 22:56 GMT
எதிர்க்கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை முன்னிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி உடன் சரத் யாதவ் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை இறுதியில் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக அந்த பதவிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், பா.ஜனதா சார்பில் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்யவும், தேர்தல் குறித்து வியூகம் அமைக்கவும் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. ஜனாதிபதி பதவிக்கு பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.

எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது? என்பது தொடர்பான ஆலோசனையில் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட பலரும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக சோனியா காந்தியை ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் நேற்று சந்தித்தார்.

முன்னதாக ஜனாதிபதி வேட்பாளருக்கான யூக பட்டியலில் சரத் யாதவின் பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News