செய்திகள்

மலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: சாத்வி பிரக்யாவிற்கு ஜாமீன் வழங்கி மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-04-25 10:38 GMT   |   Update On 2017-04-25 10:38 GMT
மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பெண் சாமியார் சாத்வி பிரக்யா-வுக்கு ஜாமீன் வழங்கி மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை:

மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து சுமார் 270 கி.மீட்டர் தொலைவில் உள்ள மலேகானில் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி ரம்ஜான் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்தர்கள் மீது இரட்டை வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த இரட்டை வெடி குண்டு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த வழக்கை முதலில் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரித்தது. இதில்,  லெப்டினண்ட் கலோனல் ஸ்ரீகாந்த் புரோஹித், மற்றும் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்டோர் முதன்முதலாக குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றனர். 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சாத்வி பிரக்யா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 2009-ம் ஆண்டு மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இவர்களை குற்றவாளிகளாகச் சேர்த்தது.



அதன் பிறகு தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த வழக்கு 2011-ல் மாற்றப்பட்டது. அடுத்தடுத்த பல்வேறு திருப்பங்களை இந்த வழக்கு கண்டு வந்த நிலையில்,சாத்வி பிரக்யா உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டை தேசிய புலனாய்வு முகமை கைவிட்டது. இருப்பினும்,  லெப்டினன்ட் கலோனல் பிரசாத் புரோகித் உள்ளிட்ட 10 நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். சாத்வி பிரக்யா மீதான குற்றச்சாட்டு கைவிடப்பட்டது கடும் விமர்சனங்களை கிளப்பியது.

குற்றச்சாட்டு கைவிடப்பட்டதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்க கோரி சாத்வி பிரக்யா விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நிராகரித்த விசாரணை நீதிமன்றம் குற்றச்சாட்டை கைவிட்டது குறித்து கேள்வியும் எழுப்பியது. இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சாத்வி பிரக்யா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மும்பை நீதிமன்றம் சாத்வி பிரக்யாவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. எனினும் லெப்டினட் கலோனல் ஸ்ரீகாந்த் புராகித்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் எட்டு ஆண்டுகளாக சிறையில் இருந்த சாத்வி பிரக்யாவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து அவரை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.

Similar News