செய்திகள்

கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகளுக்கு எதிரான வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

Published On 2017-04-25 00:44 GMT   |   Update On 2017-04-25 00:44 GMT
கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகள் அமைக்க கடலோர பகுதி ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி:

கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகள் அமைக்க கடலோர பகுதி ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷியாவின் உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் மூலம் மின்சார உற்பத்தி நடைபெறுகிறது.

கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த 3,4,5, மற்றும் 6-வது அணு உலைகள் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடலோர பகுதி ஒழுங்குமுறை மண்டல ஒப்புதலை வழங்கியது.

இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பைச் சேர்ந்த ஜி.சுந்தரராஜன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வழங்கிய கடலோர பகுதி ஒழுங்குமுறை மண்டல அனுமதி 3 முதல் 6 வரையிலான அணு உலைகளுக்கும் பொருந்தும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2013-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கி இருப்பதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து ஜி.சுந்தரராஜன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மேலும் 4 அணு உலைகளுக்கு கடலோர பகுதி ஒழுங்குமுறை மண்டல ஒப்புதல் வழங்கப்பட்டதில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றி முறைப்படி ஆய்வு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷண் வாதாடுகையில், அணு உலைகள் அமைக்கும் போது சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய வேண்டியது கட்டாயம் என்றும், ஆனால் கூடங்குளத்தில் 3 முதல் 6 வரையிலான 4 அணு உலைகளுக்கு கடலோர பகுதி ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்கப்பட்டதில் இது கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றும் கூறினார்.

மேலும் சுப்ரீம் கோர்ட்டு முன்பு வழங்கிய தீர்ப்பு 1 மற்றும் 2-வது அணு உலைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அவர் வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு கோரி மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் மற்றும் இந்திய அணுசக்தி கழகத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Similar News