செய்திகள்

ரெயில் கழிவறையில் பிரசவமாகி தண்டவாளத்தில் விழுந்த குழந்தை

Published On 2017-04-24 11:43 GMT   |   Update On 2017-04-24 11:43 GMT
ரெயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு கழிவறையில் பிரசவமாகி தண்டவாளத்தில் விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது.
மும்பை:

மராட்டிய மாநிலம் ரத்தினகிரியில் இருந்து மும்பையில் உள்ள தாதருக்கு பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சாந்தனா ‌ஷகா என்ற பெண் பயணம் செய்தார்.

அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். காசுசுலாய் என்ற இடத்தில் ரெயில் வந்த போது, சாந்தனா ‌ஷகா கழிவறைக்கு சென்றார்.

அப்போது திடீர் பிரசவ வலி ஏற்பட்டு கழிவறையிலேயே அவருக்கு குழந்தை பிறந்து விட்டது. அத்துடன் குழந்தை கழிவறை குழாய் வழியாக தண்டவாளத்தில் விழுந்து விட்டது.

உடனே சாந்தனா ‌ஷகா சத்தம் போட்டு அலறினார். ரெயில் பயணிகள் உஷாராகி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார்கள். அதற்குள் ரெயில் நீண்ட தூரம் வந்து விட்டது.

ரெயிலில் இருந்த போலீஸ்காரர் மயூர் தயாடே ரெயிலில் இருந்து இறங்கி பின்னோக்கி சென்று தேடினார்.

அப்போது தண்டவாளத்தில் குழந்தை விழுந்து கிடந்தது. சிறிய காயங்களுடன் அந்த குழந்தை உயிருடன் இருந்தது. அவர் குழந்தையை மீட்டு எடுத்து வந்தார்.

உடனே ஆம்புலன்சை வரவழைத்து தாயையும், குழந்தையையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News