செய்திகள்

காதலிக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் விமான கடத்தல் பீதி கிளப்பிய டிராவல் ஏஜெண்ட் கைது

Published On 2017-04-20 19:57 GMT   |   Update On 2017-04-20 19:57 GMT
விமான கடத்தல் பீதி கிளப்பிய டிராவல் ஏஜெண்ட் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை காதலிக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் போலி இ-மெயில் அனுப்பியதால் சிக்கினார்.
ஐதராபாத்:

விமான கடத்தல் பீதி கிளப்பிய டிராவல் ஏஜெண்ட் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை காதலிக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் போலி இ-மெயில் அனுப்பியதால் சிக்கினார்.

மும்பை போலீஸ் கமிஷனருக்கு 15-ந் தேதி இரவு ஒரு பெண் பெயரில் இ-மெயில் வந்தது. அதில், அடையாளம் தெரியாத 6 பேர் ஒன்றாக நின்று கூடி பேசியபோது, 23 பேர் தனித்தனி குழுவாக பிரிந்து சென்னை, ஐதராபாத், மும்பை விமான நிலையங்களில் விமான கடத்தலில் ஈடுபட திட்டம் தீட்டினர். நான் கேட்டதை தங்களிடம் தெரிவிக்கிறேன். இது உண்மையா? இல்லை பொய்யா? என தெரியவில்லை. இந்திய பிரஜை என்ற முறையில் எனக்கு தெரிந்த தகவலை தெரிவிப்பது என் கடமை என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் அதன் கீழே, இந்த தகவலை அனுப்பிய நான் யார்? என்று விசாரணையில் இறங்க வேண்டாம். ஏனெனில் உங்களால் அது முடியாது? என்று சவால் விடப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை போலீசார் 15-ந் தேதி நள்ளிரவே மும்பை, சென்னை, ஐதராபாத் விமான நிலைய அதிகாரிகளுக்கு கடத்தல் தகவல் குறித்த எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து 3 விமான நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், உஷார் நிலையும் ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாடு, தெலுங்கானா, மராட்டிய போலீசாரும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இறுதியில் அந்த இ-மெயில் தகவல் பீதியை ஏற்படுத்துவதற்காக அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து இந்த இ-மெயில் எங்கிருந்து வந்தது என விசாரணை நடத்தினர்.

ஐதராபாத்தில் உள்ள எஸ்.ஆர்.நகர் என்ற இடத்தில் இருந்து அந்த இ-மெயில் அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து அதை அனுப்பியது ஐதராபாத்தை சேர்ந்த டிராவல் ஏஜெண்ட் வம்சி கிருஷ்ணா என தெரிந்தது. இதையடுத்து அவரை ஐதராபாத் போலீசார் நேற்று கைது செய்தனர்.

இது குறித்து ஐதராபாத் போலீஸ் கமிஷனர் மகேந்தர் ரெட்டி கூறியதாவது:-

சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணை வம்சி கிருஷ்ணா காதலித்து வந்துள்ளார். தன் காதலியை சென்னையில் இருந்து மும்பைக்கு விமானத்தில் ஜாலியாக அழைத்து செல்வதாக அவர் வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால் விமானத்தில் அவரை அழைத்து செல்லும் அளவுக்கு வம்சி கிருஷ்ணாவிடம் பணம் இல்லை.

இதை தன் காதலியிடம் கூறினால் அவர் ஏற்காமல், காதலை முறித்து விடுவாரோ என வம்சி கிருஷ்ணா அஞ்சினார். இதனிடையே கடந்த 15-ந் தேதி தன் காதலியுடன் அவர் இணையதளத்தில் ‘சாட்’ செய்தார். அப்போது சென்னையில் இருந்து மும்பைக்கு 16-ந் தேதி செல்ல ஏற்கனவே தான் தயார் செய்த போலி டிக்கெட்டை காதலியின் இ-மெயிலுக்கு அனுப்பினார்.

அதே சமயம் விமானங்களை ரத்து செய்யப்படும் சூழ்நிலையை உருவாக்கினால் காதலி சமாதானம் ஆகி விடுவார் என வம்சி கிருஷ்ணா முடிவு செய்தார். அன்று இரவே போலி இ-மெயிலை உருவாக்கி அதில் இருந்து மும்பை போலீஸ் கமிஷனருக்கு ஒரு பெண் அனுப்பியது போல இ-மெயில் தகவலை அனுப்பினார். எனினும் சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து இ-மெயில் எங்கிருந்து வந்தது என கண்டுபிடித்தனர். அதை தொடர்ந்து வம்சி கிருஷ்ணா சிக்கினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News