செய்திகள்

அத்வானியின் ஜனாதிபதி பதவி வாய்ப்புக்கு முட்டுக்கட்டை போட்ட மோடி அரசு: லாலு

Published On 2017-04-19 11:38 GMT   |   Update On 2017-04-19 11:39 GMT
பாபர் மசூதி வழக்கில் மீண்டும் அத்வானியை இணைத்ததன் வாயிலாக அவர் ஜனாதிபதி ஆகும் வாய்ப்புக்கு மோடி அரசு முட்டுக்கட்டை போட்டிருப்பதாக லாலு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
பாட்னா:

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை காலதாமதமின்றி 4 வாரத்துக்குள் தொடங்க வேண்டும் என்றும், தினசரி வழக்கு விசாரணையை நடத்தி 2 ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்றும் லக்னோ கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

பா.ஜனதா சார்பில் எல்.கே.அத்வானியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு அவருக்கு பின்னடைவு ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதுதொடர்பாக, பீகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:-


சி.பி.ஐ. அமைப்பானது நரேந்திர மோடி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதனால், இது அத்வானி ஜனாதிபதி ஆகும் வாய்ப்புகளுக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியாகும். பா.ஜ.க. மிகவும் ஆபத்தான கட்சி. தனக்கு ஆகாதவர்களை பழி தீர்ப்பதில் சொந்தக் கட்சிக்காரர்களாக இருந்தாலும் பாகுபாடு காட்டாது.

1990-ம் ஆண்டு நான் பீகார் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தபோது, மதநல்லிணக்கத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டார். இதனால், சமஸ்திபூரில் அவர் கைது செய்யப்பட்டார். மதவாத வெறுப்புணர்வை பரப்ப நினைக்கும் பா.ஜ.க.வை எங்கள் கட்சி அனுமதிக்காது. சுப்ரீம் கோர்ட் இன்று அளித்த தீர்ப்பை ராஷ்டிரிய ஜனதா தளம் வரவேற்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News