செய்திகள்

கேரளாவில் ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியிடம் சில்மி‌ஷம்: வாலிபருக்கு தர்ம அடி

Published On 2017-04-17 06:49 GMT   |   Update On 2017-04-17 06:49 GMT
கேரளாவில் ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை பயணிகள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் கொட்டாரக்கராவில் இருந்து சாலக்குடியை நோக்கி கேரள அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.

சாலக்குடி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அந்த பஸ்சில் பயணம் செய்தார். அவர் டிரைவர் இருக்கைக்கு பின்புறம் அமர்ந்து இருந்தார். அந்த பஸ் நிறுத்தத்தில் நின்ற போது, ஒரு வாலிபர் அந்த பஸ்சில் ஏறினார்.

அவர் அந்த மாணவியின் அருகில் உட்கார்ந்தார். மாணவியும் அதை கண்டு கொள்ளவில்லை. பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும் வாலிபர் மாணவியிடம் சில்மி‌ஷம் செய்தார். மாணவி அதை கண்டித்தும் வாலிபர் சில்மி‌ஷத்தை தொடர்ந்தார்.

அதன்பிறகு திடீர் என்று வாலிபர் அந்த மாணவியை கட்டிபிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சல் போட்டார். இதை பார்த்ததும் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். உடனே மற்ற பயணிகள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பிறகு அந்த பஸ்சை டிரைவர் சாலக்குடி போலீஸ் நிலையத்திற்கு ஓட்டி சென்றார். மாணவி போலீசில் கொடுத்த புகாரை தொடர்ந்து வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் பலீஷ் (வயது 31) சாலக்குடியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் மீது இதுபோல ஏராளமான வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

Similar News