செய்திகள்

பாடப்புத்தகத்தில் பெண்கள் பற்றி சர்ச்சை கருத்து: புத்தக பதிப்பாளர் மீது நடவடிக்கை

Published On 2017-04-13 22:48 GMT   |   Update On 2017-04-13 22:48 GMT
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்புக்கான பாடப்புத்தகத்தில் பெண்கள் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்துள்ள பதிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்
புதுடெல்லி:

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்புக்கான ‘சுகாதாரம் மற்றும் உடற்கல்வி’ பாடப்புத்தகத்தில் பெண்களின் உடல் வடிவமைப்பு பற்றி குறிப்பிட்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக அந்த பாட பகுதியை நீக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

இதுபற்றி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரிடம் நேற்று நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், பெண்களை பற்றி பாடப்புத்தகத்தில் அவ்வாறு குறிப்பிட்டது தவறானது என்றும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட புத்தக பதிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டு இருப்பதாகவும், மேலும் அந்த பதிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்வது பற்றி மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்.சி.இ.ஆர்.டி.) பாடப்புத்தகங்களை மட்டுமே பயன்படுத்துமாறு அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அப்போது அவர் கூறினார்.  

Similar News