செய்திகள்

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக போலீஸ் ரோந்து வாகனங்கள்: சித்தராமையா தொடங்கி வைத்தார்

Published On 2017-04-10 22:10 GMT   |   Update On 2017-04-10 22:10 GMT
பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 51 போலீஸ் ரோந்து வாகனங் களின் சேவையை முதல்-மந்திரி சித்தராமையா நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பெங்களூரு:

பெங்களூருவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும் ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவவும் போலீஸ் துறை சார்பில் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி புதிதாக ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த ரோந்து வாகனங்களை பெண் போலீசார் இயக்குவார்கள். இந்த இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவிகள் உள்ளிட்ட நவீன கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கும்.

மேலும் ஆபத்தில் இருக்கும் பெண்கள் உடனடியாக போலீஸ் உதவியை பெறும் வகையில் “சுரக்‌ஷா” புதிய செல்போன் செயலி(ஆப்ஸ்) ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சுரக்‌ஷா செயலி மூலம் பெறப்படும் தகவல் நகரின் பல பகுதிகளில் ஆங்காங்கே ரோந்து பணியில் இருக்கும் இளஞ்சிவப்பு ரோந்து வாகனத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதன் மூலம் ஆபத்தில் இருக்கும் பெண்களை காப்பாற்றவும் அவர்களுக்கு உதவவும் முடியும். ஜி.பி.எஸ். கருவி மூலம் உதவி கேட்டு தகவல் கொடுக்கும் பெண்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு அந்த இடத்திற்கு இளஞ்சிவப்பு ரோந்து வாகனம் செல்லும். மேலும் சுரக்‌ஷா செயலி மூலம் உதவி கேட்டு வரும் தகவல் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கும் தெரிவிக்கப்படும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கான இந்த போலீஸ் இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களின் சேவை தொடக்க விழா பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு, 51 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களின் சேவையையும் சுரக்‌ஷா செல்போன் செயலியையும் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

“நான் அடிக்கடி சொல்வது போல், போலீசார் தங்களின் போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ள குற்ற சம்பவங்களில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் குற்றங்களின் எண்ணிக்கை குறையும். நவீன ரோந்து வாகனங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் சிறப்பான முறையில் பயன்பட வேண்டுமென்றால் அதே அளவுக்கு போலீசார் நேர்மையாக பணியாற்ற வேண்டும்.

போலீசார் அதிக நேர்மை யுடன் பணியாற்றி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கி, செயின் பறிப்பு, வழிப்பறி, தாக்குதல், கொள்ளை சம்பவங்களை தடுத்தால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். போலீசார் மிகுந்த கவனத்துடன் பணியாற்றி குற்ற சம்பவங்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

விழாவில் பெண்கள் புகார் தெரிவிப்பதற்காக புதிய செயலி(ஆப்) ஒன்றையும் முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார். விழாவில் போலீஸ் மந்திரி பரமேஸ்வர், பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ், நகர வளர்ச்சித்துறை மந்திரி ரோஷன் பெய்க் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “பெண்கள் அதிகமாக பணியாற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள், பெண்கள் தங்கும் விடுதிகள் உள்ள பகுதிகளில் இந்த ரோந்து வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும். பிரச்சினையில் சிக்கும் பெண்கள் உடனடியாக செயலி(ஆப்) மூலமாக தகவல் தெரிவித்தால் அங்கு இந்த ரோந்து வாகனங்கள் விரைந்து செல்லும்” என்றார். 

Similar News