செய்திகள்

பாராளுமன்ற இடைத்தேர்தல்: ஸ்ரீநகரில் இண்டர்நெட் சேவைகள் நிறுத்தம்

Published On 2017-04-09 00:30 GMT   |   Update On 2017-04-09 00:30 GMT
ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து இண்டர்நெட் சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக பொறுப்பேற்றிருந்தவர், தாரிக் ஹமித் கராரா. மக்கள் குடியரசு கட்சியை சேர்ந்த இவர் அக்கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் பாராளுமன்ற பதவியையும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜினாமா செய்தார். பின்னர், காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

இவரது ராஜினாமாவை தொடர்ந்து காலியாக இருக்கும்  ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாக ஸ்ரீநகர் முழுக்க இன்று நள்ளிரவு முதல் இண்டர்நெட் சேவைகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இண்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத் தேர்தலையொட்டி தவறான தகவல்களை பரப்புவதற்கான வாய்ப்புகள் அதிகளவு இருப்பதால் இண்டர்நெட் இணைப்புகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இடைத் தேர்தல் நடந்து முடிந்ததும் இண்டர்நெட் இணைப்புகள் மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர் தொகுதி முழுக்க 12.61 லட்சம் வாக்காளர்கள் வாக்கு செலுத்து ஏதுவாக மொத்தம் 1,500 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட மொத்தம் 9 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

Similar News