செய்திகள்

உ.பி. முதல்-மந்திரியானது ஆச்சரியமாக உள்ளது: யோகி ஆதித்யநாத்

Published On 2017-03-30 07:39 GMT   |   Update On 2017-03-30 07:39 GMT
உத்தர பிரதேச மாநில முதல்-மந்திரியானது ஆச்சரியமாக உள்ளது என யோகா குரு ராம்தேவ் நடத்திய பதஞ்சலி யோக மி‌ஷன் விழாவில் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
லக்னோ:

உத்தரபிரதேச முதல்-மந்திரியாக கடந்த 19-ந்தேதி பா.ஜ.க. எம்.பி. யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றார். நேற்று அவர் ராம்தேவ் நடத்திய பதஞ்சலி யோக மி‌ஷன் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

உத்தரபிரதேச தேர்தல் முடிந்ததும் நான் டெல்லி சென்று விட்டேன். யார் முதல்-மந்திரி என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். திடீரென எனக்கு அமித் ஷாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் என்னிடம், ‘‘உடனே உத்தரபிரதேசத்துக்கு புறப்பட்டு வாருங்கள்’’ என்றார். அதற்கு நான், இப்போதுதான் நான் டெல்லி வந்துள்ளேன் என்று கூறினேன்.

அப்போதுதான் அமித்ஷா, என்னை பா.ஜ.க. தலைவர்கள் ஒரு மனதாக முதல்வராக தேர்வு செய்திருப்பதாக கூறினார். அவர் அப்படி சொன்னதும் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அந்த சமயத்தில் என்னிடம் ஒரு ஜோடி உடைதான் இருந்தது. எனவே மீண்டும் லக்னோவுக்கு எப்படி செல்வது என்று எனக்கு குழப்பமாக இருந்தது.

பா.ஜ.க. தலைவர்களின் பரிந்துரையை நான் ஏற்க வில்லையென்றால் பொறுப்பில் இருந்து நழுவிச் சென்றது போல ஆகிவிடும். எனவேதான் நான் உத்தரபிரதேசத்து முதல்-மந்திரி பதவியை ஏற்க சம்மதம் தெரிவித்தேன்.

எனக்கு உத்தரபிரதேசத்தின் கள நிலவரம் முழுமையாகத் தெரியும். உத்தர பிரதேசத்து தெருக்களில் சுற்றி, திரிந்து கோவில்களில் பிச்சை எடுத்த நான் பாராளுமன்றத்துக்கு சென்றவன்.



உத்தரபிரதேச மாநில மக்களை என்ன நோய் பிடித்து இருக்கிறது என்பது எனக்கு தெரியும். அதை குணமாக்கும் வகையில் செயல்படுவேன்.

எப்போதும் நேர்மறை சிந்தனையுடன் இருப்பது பற்றி நான் பிரதமர் மோடியிடம் பாடம் கற்றுள்ளேன். அந்த வழியில் ஆட்சி நடத்துவேன்.

இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.

Similar News