செய்திகள்
சிறுமி சிவானி மூலம் வீட்டுச்சாவியை மாணவர் அமலிடம் உம்மன்சாண்டி ஒப்படைத்த காட்சி.

ஏழை மாணவனுக்கு சொந்த செலவில் வீடு கட்டி கொடுத்த உம்மன்சாண்டி

Published On 2017-03-30 05:12 GMT   |   Update On 2017-03-30 05:12 GMT
கேரளாவில் ஏழை மாணவனுக்கு சொந்த செலவில் வீடு கட்டி கொடுத்த உம்மன்சாண்டி, சாவியை அரசு பஸ்சில் சென்று மாணவனிடம் ஒப்படைத்தார்.
திருவனந்தபுரம்:

கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி மிகவும் எளிமையானவர். அவர் முதல்-அமைச்சராக இருந்தபோதும் ஆடம்பரங்களை விரும்பியது இல்லை. ரெயிலில் சாதாரண வகுப்பில் செல்வது, அரசு பஸ்சில் பயணிகளோடு பயணியாக செல்வது என்று தனது எளிமையை வெளிப்படுத்தியவர்.

உம்மன்சாண்டி முதல்- அமைச்சராக இருந்தபோது, நடைகாவு பகுதியில் ஒரு அரசு பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது அந்த பள்ளியில் 3-ம் வகுப்பு படித்த சிவானி என்ற மாணவி, ‘உம்மன்சாண்டி...’ என்று சத்தம் போட்டு அவரை அழைத்தார்.

முதல்-மந்திரியை பெயர் சொல்லி அழைத்ததை கேட்டு மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் உம்மன்சாண்டி அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் சிரித்துக்கொண்டே அந்த மாணவியை அருகில் அழைத்து விவரம் கேட்டார்.

அப்போது அந்த மாணவி, தனது சக மாணவனான அமல் என்பவன் மிகவும் ஏழை என்பதால் அவனுக்கு சொந்தமாக வீடு கட்டி தரும்படி கோரிக்கை விடுத்தார்.



அந்த மாணவியின் உயர்ந்த குணத்தை பாராட்டிய உம்மன்சாண்டி, அரசு செலவில் ரூ.3 லட்சத்தில் அந்த மாணவனுக்கு வீடு கட்டி கொடுக்க உத்தரவிட்டார்.

ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால் உம்மன்சாண்டி முதல்வர் பதவியை இழந்தார். அதனால் ஏழை மாணவனுக்கு வீடு கட்டி கொடுக்கும் பணி நடைபெறவில்லை.

ஆனாலும் தான் கொடுத்த வாக்குறுதியை எப்படியாவது நிறைவேற்ற வேண்டுமென்று உம்மன்சாண்டி முடிவு செய்தார். ஆனால் அதற்குரிய பணம் அவரிடம் இல்லாததால் தனது உறவினர்கள், நண்பர்கள் உதவி மூலம் பணத்தை திரட்டி மாணவன் அமலுக்கு வீடு கட்டி கொடுக்கும் பணியை தொடங்கினார். தற்போது அந்த வீடு பணி நிறைவடைந்ததை தொடர்ந்து வீட்டை அந்த மாணவனுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக உம்மன்சாண்டி அரசு பஸ்சில் பயணம் செய்தார். தன்னுடன் மாணவி சிவானியையும் அவர் மறக்காமல் அழைத்துச் சென்றார்.

புதிய வீட்டிற்கு சென்றதும் அந்த வீட்டின் சாவியை சிவானியிடம் கொடுத்து மாணவர் அமலிடம் ஒப்படைத்தார். மேலும் அங்கு குத்து விளக்கேற்றி வைத்த உம்மன்சாண்டி, அந்த வீட்டின் கட்டுமான பணிகளை சுற்றிப்பார்த்து திருப்தி அடைந்து பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Similar News