செய்திகள்

அரியானாவில் இறைச்சி கடைகளை மூட வைத்த சிவசேனா தொண்டர்கள்

Published On 2017-03-29 07:43 GMT   |   Update On 2017-03-29 08:52 GMT
நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதால் அரியானா மாநிலத்தில் குர்கான் நகரில் உள்ள இறைச்சி கடைகளை சிவசேனா தொண்டர்கள் மூட வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர்:

உத்தரப்பிரதேச புதிய முதல்-மந்திரியாக சமீபத்தில் பதவியேற்ற யோகி ஆதித்யநாத், மாடுகளை வெட்டும் இடங்களை மூடுவதற்கு உத்தரவிட்டதோடு, அரசின் அனுமதி பெறாத ஆடு- கோழி வெட்டும் இறைச்சி கூடங்களையும் அவர் மூடுவதற்கு உத்தரவிட்டிருந்தார்.  முதல்-மந்திரியின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மாநிலம் முழுவதும் இறைச்சி கடைக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வட மாநிலங்களில் தற்போது சித்திரை மாத நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வருதால், அரியானா மாநிலத்தில் பழைய குர்கான் நகரில் உள்ள இறைச்சிக் கூடங்களுக்கு நேற்று சென்ற சிவசேனா தொண்டர்கள், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 9 நாட்களுக்கு கடைகளை மூடுமாறு கூறியுள்ளனர். மேலும், வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் அனைத்து இறைச்சி கடைகளையும் மூட வேண்டும் என நோட்டீஸ் அளித்துள்ளனர்.



இதையடுத்து அந்நகரில் உள்ள சுமார் 500 இறைச்சி கடைகள் இன்று மூடப்பட்டுள்ளது. மேலும், பண்ணாட்டு அசைவ உணவகமான கே.எப்.சி உள்ளிட்ட சில கடைகளும் மூடப்பட்டுள்ளன. இவ்விவகாரம் பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து மூடப்பட்ட இறைச்சி கடைகள் சிறிது நேரத்தில் திறக்கப்பட்டது எனவும், சட்டவிரோதமாக இறைச்சி கடைகளை மூடச் சொல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

Similar News