செய்திகள்

சத்தீஸ்கரில் மாயமான கனடா சைக்கிள் வீரரை நக்சலைட்டுகள் கடத்தவில்லை: போலீஸ்

Published On 2017-03-28 22:39 GMT   |   Update On 2017-03-28 22:39 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் பகுதியில் மாயமானதாக கூறப்பட்ட கனடாவைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீரரை யாரும் கடத்தவில்லை என்றும் பாதுகாப்பாக உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராய்ப்பூர்:

கனடாவைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீரர் ஜான் சிஸ்லசாக் கடந்த 14-ம் தேதி மும்பையிலிருந்து சத்தீஸ்கரில் உள்ள பஸ்டார் மாவட்டத்துக்கு சைக்கிள் பயணத்தை தொடங்கினார். 15 நாட்களுக்குப்பின் நேற்று முன் தினம் மாலை சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்திற்கு ஜான் வந்து சேர்ந்தார்.

அதற்குப்பின் அவரைக் காணவில்லை. நக்சல்கள் நடமாட்டம் நிறைந்த பகுதி என்பதால் ஜானை அவர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என்ற ரீதியில் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

”அவர் பாதுகாப்பாக உள்ளார். அவர் மாவோயிஸ்ட்கள் குழு உள்ள சிங்கமட்கு கிராமத்தில் உள்ளார். சைக்கிள் வீரர் யாராலும் கடத்தப்படவில்லை. அவரை தொடர்பு கொள்வதில் சிறிது சிக்கல் ஏற்பட்டுவிட்டது” என்று சுக்மா மாவட்ட போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “சிங்கமட்கு கிராமத்திற்கு அவர் நுழைந்த போது, அவர் ஒரு போலீஸ் உளவாளி என்று அப்பகுதி மக்கள் எண்ணினர். சைக்கிள் வீரர் பேசிய மொழியும் அவர்களுக்கு புரியவில்லை. இதனால் அவரை மேற்கொண்டு பயணம் செய்யவிடாமல் தடுத்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு செய்தி கொடுத்தனர். பின்னர் அவருக்கும் பாதுகாப்பு படையினருக்கு எவ்வித தொடரும் இல்லை என்று கிராமத்தினரிடம் சொல்லி அனுப்பிவிட்டோம்” என்றார்.

Similar News