செய்திகள்

உ.பி.யில் நைஜீரிய நாட்டவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது

Published On 2017-03-28 09:54 GMT   |   Update On 2017-03-28 09:54 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நைஜீரிய நாட்டவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் 12-ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவர் ஒருவர் அதிக அளவு போதைப் பொருள் பயன்படுத்தியதின் காரணமாக இதய அடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அப்பகுதியில் அதிகளவில் வசித்து வரும் ஆப்ரிக்க நாடான நைஜீரியாவை சேர்ந்தவர்களே மாணவனுக்கு போதைப் பொருட்களை கொடுத்திருக்கலாம் என கருதிய மாணவரின் உறவினர்கள், நேற்று நைஜீரியா நாட்டவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் நைஜீரிய இளம்பெண் ஒருவர் உள்ளூர்வாசிகளால் கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உள்ளூர்வாசிகளின் தாக்குதலில் காயமடைந்த நைஜீரிய நாட்டவர்களை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும், கடத்தப்பட்டதாக கூறப்படும் இளம்பெண் கிடைத்துவிட்டதாகவும், சட்டம் - ஒழுங்கு நிலை கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அன்சால் மால் என்ற வணிக வளாகம் அருகே நைஜீரியர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சில பேரை தேடி வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நைஜீரியர்களை அந்நாட்டு துதரக அதிகாரிகள் இன்று பார்வையிட்டனர்.



முன்னதாக, நொய்டாவில் நைஜீரிய நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அம்மாநில முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் தான் கேட்டுக் கொண்டதாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News