செய்திகள்

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கெட்டுப்போன உணவு: பயணிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2017-03-28 07:10 GMT   |   Update On 2017-03-28 07:10 GMT
நாட்டின் பெருமைக்குரிய ரெயில் சேவையாக கருதப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வழங்கப்பட்ட கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிலருக்கு உடல் நலக்கேடு ஏற்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பயணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்கத்தா:

டெல்லியில் இருந்து கொல்கத்தா செல்லும் டெல்லி-சியெல்டா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்றிரவு வழங்கப்பட்ட உணவு, கெட்டுப்போய் இருந்ததால் அதை சாப்பிட்ட சிலர் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆளாகினர்.

குறிப்பாக, முன்பதிவு பெட்டிகளான B8 மற்றும் B9 பெட்டிகளில் பயணித்த சிலருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டது. கெட்டுப்போன உணவை தந்து தங்களை மோசமான எதிர்விளைவுக்கு உள்ளாக்கிய ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர்.



அசனால் ரெயில் நிலையத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் நின்றபோது, கீழே இறங்கிய பல பயணிகள் நடைமேடையில் ஒன்று திரண்டனர். ரெயில்வே நிர்வாகத்தின் மெத்தனப்போக்கை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், அசனால் நிலையத்தில் உள்ள ரெயில்வே காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்த பயணிகள், அதன்பிறகு சியெல்டாவை நோக்கி தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.

Similar News