செய்திகள்

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சமரசம் செய்ய மோடி முயற்சி

Published On 2017-03-26 06:44 GMT   |   Update On 2017-03-26 06:44 GMT
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற கூட்டணி கட்சிகள் ஆதரவு தேவைப்படுவதால் பிரதமர் மோடி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சமரசப்படுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
புதுடெல்லி:

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற செய்ய பிரதமர் மோடி விரும்புகிறார்.

அவர் வெற்றி பெற வேண்டும் என்றால் பாரதிய ஜனதா எம்.பி. எம்.எல்.ஏக்களின் ஓட்டுகள் மட்டும் போதாது. கூட்டணி கட்சிகளின் ஓட்டுகளும் மற்றும் சில கட்சிகளின் ஓட்டுகளும் தேவைப்படுகிறது.

எனவே, கூட்டணி கட்சிகள் மற்றும் சில கட்சிகளின் ஆதரவை பெற பிரதமர் மோடி முயற்சித்து வருகிறார். இதற்காக அடுத்த வாரத்தில் பிரதமர் மோடி கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து அளிக்க திட்டமிட்டுள்ளார். பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி சமீப காலமாக பாரதிய ஜனதாவுடன மோதல் போக்கில் உள்ளது. மராட்டியத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கூட இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டன.



ஜனாதிபதி தேர்தலில் சிவசேனாவின் ஆதரவும் கண்டிப்பாக தேவை என்று மோடி விரும்புகிறார். எனவே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சமரசப்படுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக தனது விருந்தில் பங்கேற்குமாறு அவருக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதில், உத்தவ் தாக்கரே கலந்து கொள்வாரா? இல்லையா? என்பது தெரியவில்லை.

இதற்கிடையே மராட்டிய மாநிலத்தில் நடக்கும் இடைத்தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கும் முயற்சி நடக்கிறது.

இதற்காக மாநில பாரதிய ஜனதா மந்திரி சுதிர் முகந்திவார் வருகிற 29-ந் தேதி உத்தவ் தாக்கரேயை சந்திக்க இருக்கிறார்.

Similar News