செய்திகள்

தேவைப்படுகிற இடத்தில் கையை ஓங்குவோம்: சிவசேனா தலைவர் கருத்து

Published On 2017-03-25 18:57 GMT   |   Update On 2017-03-25 19:10 GMT
யாரையும் தாக்குவது சிவசேனாவின் கலாசாரம் அல்ல. அதேசமயம் தேவைப்படுகிற இடங்களில் நிச்சயம் கையை ஓங்குவோம் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் எம்.பி. கூறியுள்ளார்
மும்பை:

சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் வைத்து ஏர் இந்தியா விமான நிறுவன மேலாளர் சுகுமார் என்பவரை 25 முறை செருப்பால் அடித்து சர்ச்சையில் சிக்கினார். இந்த விவகாரம் குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் எம்.பி.யிடம் மும்பையில் நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது, அவர் கூறியதாவது:-

எங்கள் கட்சியின் எம்.பி. இவ்வாறு நடந்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டது ஏன்? என்பதை கண்டறிய விசாரணை நடத்த வேண்டும். யாரையும் தாக்குவது சிவசேனாவின் கலாசாரம் அல்ல. அதேசமயம் தேவைப்படுகிற இடங்களில் நிச்சயம் கையை ஓங்குவோம்.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் மோசமான சேவை காரணமாக ஒரு எம்.பி. மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான பயணிகளும் சிரமம் அனுபவிக்கின்றனர். தங்களுடைய விமானத்தில் பயணம் செய்ய எங்கள் எம்.பி.க்கு தடை விதிக்க எடுக்கப்பட்ட முடிவை போல், அதன் சேவையை உயர்த்துவதிலும் துரிதமாக செயல்பட்டால் நலமாக இருக்கும்.

இவ்வாறு சஞ்சய் ராவுத் எம்.பி. தெரிவித்தார். 

Similar News