செய்திகள்

ரூ.96 ஆயிரத்தை மாற்றித் தரக்கோரி மோடிக்கு கடிதம் எழுதிய கைவிடப்பட்ட சிறுவன்

Published On 2017-03-25 16:53 GMT   |   Update On 2017-03-25 16:53 GMT
ரிசர்வ் வங்கி மறுத்ததால் 96 ஆயிரம் ரூபாய் பழைய நோட்டுக்களை மாற்றித்தரும்படி பெற்றோர்களை இழந்த சிறுவன் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளான்.
ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள கிராமம் சரவாடா. இங்குள்ள ஆர்.கே. புரத்தில் ராஜூ- பூஜா பஞ்சாரா என்ற தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 16 வயதில் (தற்போது) ஒரு மகனும், 12 வயதில் (தற்போது) ஒரு மகளும் இருந்தனர்.

ராஜூ ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் இரு குழந்தைகளுடன் பூஜா வாழ்ந்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு பூஜா கொலை செய்யப்பட்டார். அப்போது அந்த பையனுக்கு 12 வயதும், அந்த சிறுமிக்கு 8 வயதும் இருந்ததால் அவர்கள் ஆதரவற்றோர் விடுதியில் தங்கியிருந்தனர். அவர்களிடம் நடத்திய கவுன்சிலிங்கின்போது, அவர்களின் தாயார் வாழ்ந்து வந்த வீட்டின் முகவரியை கூறினார்கள்.

அதே சமயத்தில் இந்த மாத தொடக்கத்தில் போலீசார் விசாரணைக்காக அந்த வீட்டை திறந்து சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களுடன் தங்க நகைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதை எண்ணிப் பார்த்ததில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களாக மொத்தம் 96 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தைகள் நலவாரிய கமிட்டிக்கு தெரியப்படுத்தி குழந்தைகளுக்கு உதவக்கோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அவர்களும் ஆர்.பி.ஐ.யை அணுகி பழைய பணத்தை மாற்றிக் கொடுக்க கேட்டனர். ஆனால் ஆர்பிஐ அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது.

இதனால் அந்த சிறுவன் தனது கைப்பட பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ‘‘எனது தங்கை பெயரில் நிரந்தர வைப்புத் தொகையாக இதை டெபாசிட் செய்ய இருக்கிறேன். ஆகையால் எனது தாயார் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்துள்ள இந்த பழைய நோட்டுக்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுங்கள்’’ என்று எழுதியுள்ளான்.

கடந்த ஆண்டு உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் என மத்திய அரசு அறிவித்து பண ஒழிப்பு நடவடிக்கையை தொடங்கியபோது, இந்த மாதம் 31-ந்தேதி வரை ஆர்பிஐ-யில் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என கூறியிருந்தது. ஆனால் தற்போது ஆர்பிஐ-யில் பணத்தை மாற்ற முடியவில்லை என்ற புகார் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News