செய்திகள்

ஆதார் அட்டை இல்லாவிட்டாலும் குழந்தைகளுக்கான இலவச மதிய உணவு தொடரும்: மத்திய மந்திரி உறுதி

Published On 2017-03-24 09:45 GMT   |   Update On 2017-03-24 09:45 GMT
ஆதார் அட்டை இல்லாவிட்டாலும் குழந்தைகளுக்கான இலவச மதிய உணவு தொடரும் என, மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
புது டெல்லி:

நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. ஏழை மாணவ-மாணவிகள் பள்ளிகளிலேயே மதிய உணவு சாப்பிடுகிறார்கள்.

மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் தங்களது ஆதார் எண்களை பள்ளிகளில் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது. இது தொடர்பான அறிவிக்கை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில் “ஆதார் அட்டை இல்லாதவர்கள் புதிதாக விண்ணப்பித்து ஆதார் அட்டை பெற்றுக் கொண்டு வருகிற ஜூன் மாதம் 30-ந்தேதிக்குள் ஆதார் எண்ணை பள்ளிகளில் பதிவு செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆதார் அட்டை இல்லாவிட்டாலும் குழந்தைகளுக்கான இலவச மதிய உணவு தொடரும் என, மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.



மாநிலங்களவையில் இன்று ஜீரோ அவரின்போது காங்கிரஸ் தலைவர் மோதிலால் வோரா பேசும்போது, "பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க ஆதார் கட்டாயம் என அரசு தெரிவித்துள்ளது. இதனைப் பார்க்கும்போது குழந்தைகளுக்கு அளிக்கும் மதிய உணவு திட்டத்தினை அரசு நீக்குவது போல தெரிகிறது" என சந்தேகம் எழுப்பினார்.

இதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் “எல்லா குழந்தைகளுக்கும் மதிய உணவுடன் சேர்த்து ஆதார் கார்டும் கிடைக்கும். ஆதார் கார்டு இல்லாத மாணவர்களுக்கு மாநில அரசு தனித்த எண்களை அளித்து வருகிறது. மதிய உணவுத் திட்டத்துடன் ஆதார் கார்டை இணைத்ததால் அத்திட்டத்திலுள்ள ஓட்டைகள் குறைந்து வருகின்றன” என்றார்.

Similar News