செய்திகள்

12 வயதிலேயே குழந்தைக்கு தந்தையான கேரள சிறுவன்: மருத்துவ நிபுணர்கள் வியப்பு

Published On 2017-03-23 09:12 GMT   |   Update On 2017-03-23 09:12 GMT
வெளிநாடுகளைப் போல கேரளாவிலும் 12 வயதுடைய சிறுவன் குழந்தைக்கு தந்தையான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:

பள்ளி பருவத்தில் சிறுவனும், சிறுமியும் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொண்டனர் என்று வெளிநாடுகளில் அடிக்கடி செய்திகள் வெளியாவதை பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதில்லை என்று பெருமையாக பேசிக் கொள்வோம். அதை பொய்யாக்கும் சம்பவம் ஒன்று கேரளாவில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் 16 வயது சிறுமி ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அச்சிறுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதுபற்றி எர்ணாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் 16 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கியது யார்? என விசாரித்தனர்.

இதில் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன்தான் 16 வயது சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் என கூறப்பட்டது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே அவர்கள் இதுபற்றி மருத்துவ ரீதியான ஆய்வுக்கு ஏற்பாடு செய்தனர்.

அதன்படி, ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கும், சிறுவனுக்கும் மரபணு சோதனை நடத்தப்பட்டது. இருவரின் ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனைகளில் அந்த குழந்தை சிறுவனுக்கு பிறந்தது என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறுவன் மீது கேரள போலீசார் போஸ்கோ சட்டப்படி வழக்குப்பதிவு செய்தனர்.

இச்சம்பவம் பற்றி திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் உட்சுரப்பியல் பிரிவின் தலைவர் டாக்டர் ஜாபரிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அவர் கூறியதாவது:-

பருவ வயதை அடையும் முன்பு ஒருவரால் குழந்தை பெற இயலாது. ஆனால் இச்சிறுவன் மருத்துவ ரீதியாக குழந்தை பெறும் நிலையை அடைந்துள்ளார். மருத்துவத்தில் இதனை வயதுக்கு மீறிய வளர்ச்சி என்று கூறுவார்கள்.

மருத்துவ உலகில் இது போன்ற நிகழ்வுகள் எப்போதாவது நடைபெறும். எனது அனுபவத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் குழந்தைக்கு தந்தையான சம்பவம் இப்போதுதான் நடந்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

12 வயதில் குழந்தைக்கு தந்தையான இச்சிறுவன்தான் இந்தியாவில் மிகக்குறைந்த வயதில் தந்தையானவராக இருப்பார் என மருத்துவ துறையினர் கூறுகிறார்கள்.

Similar News