செய்திகள்

முன்பதிவு டிக்கெட் உறுதி செய்யப்படாவிட்டால் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்க்கு வேறு ரெயிலில் இடம்

Published On 2017-03-22 20:17 GMT   |   Update On 2017-03-22 20:17 GMT
முன்பதிவு டிக்கெட் உறுதி செய்யப்படாமல், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு வேறு ரெயிலில் இடம் ஒதுக்கப்படும். இந்த வசதி, ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
புதுடெல்லி:

முன்பதிவு டிக்கெட் உறுதி செய்யப்படாமல், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு வேறு ரெயிலில் இடம் ஒதுக்கப்படும். இந்த வசதி, ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

நாடு முழுவதும் உள்ள மக்கள், ரெயில்களில் பயணம் செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். பஸ், கார் பயணங்களை விட ரெயில் பயணம் வசதியானது, சவுகரியமானது, மலிவானது என்பதுதான் இதற்கு காரணம்.

ஆனால் முன்பதிவு டிக்கெட் பெறுவது கடினமான ஒன்றாக இருக்கிறது. ‘வெயிட்டிங் லிஸ்ட்’ என்றழைக்கப்படுகிற காத்திருப்போர் பட்டியலில் இருந்து, சில நேரங்களில் கடைசி நிமிடம் வரை காத்திருந்தும் டிக்கெட் உறுதி செய்யப்படாமல் போய் விடும்.

இதனால் பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்ய வேண்டி உள்ளது. அந்த காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டை வைத்து சாதாரண பெட்டியில் பயணம் செய்யவும் முடியாது.

இனி இந்த நிலை இருக்காது.

இப்படி ஒரு குறிப்பிட்ட ரெயிலில் பயணம் செய்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்து அது காத்திருப்போர் பட்டியலில் இருந்து கடைசி வரை உறுதி செய்யப்படாதபோது, அதே ஊருக்கு செல்கிற பிற ரெயில்களில் பயணிகளுக்கு இடம் ஒதுக்கி தரப்பட்டு விடும்.

இது பற்றிய அறிவிப்பை பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு நேற்று வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், “காத்திருப்போர் பட்டியலில் உள்ள ரெயில் பயணிகளுக்கு ஏப்ரல் 1-ந் தேதி முதல் ரெயில்வே ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்துகிறது. அவர்களது டிக்கெட்டுகள் முன்பதிவு உறுதி செய்யப்படாதபோது, அவர்கள் செல்ல விரும்புகிற இடங்களுக்கு செல்கிற மற்றொரு ரெயிலில் டிக்கெட் உறுதி செய்து, இடம் ஒதுக்கித்தரப்படும். அது ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலாக கூட இருக்கலாம். ஆனால் முதலில் செலுத்திய அதே கட்டணத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூட பயணிக்கலாம்” என கூறினார்.

மூத்த குடிமக்களுக்கு சலுகையுடன் கூடிய ரெயில் டிக்கெட் எடுப்பதற்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம் ஆக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அதே நேரத்தில் இந்த சலுகையை யாரும் தவறாக பயன்படுத்தி விடாதபடிக்கு தடுக்கிற விதத்தில் மூத்த குடிமக்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்து தகவல்களை பெற்று வைத்துக்கொள்ள ரெயில்வே விரும்புகிறது. மூத்த குடிமக்கள் தாமாக முன்வந்து தங்களைப் பற்றிய விவரங்களை தர வேண்டும். இந்த பணியை ரெயில்வே கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் தொடங்கி உள்ளது எனவும் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தெரிவித்தார். 

Similar News