செய்திகள்

யாருக்கும் இல்லை ‘இரட்டை இலை’ - தேர்தல் ஆணையம் அதிரடி

Published On 2017-03-22 18:01 GMT   |   Update On 2017-03-22 18:01 GMT
அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வமான இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வமான இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டுள்ளது. ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற இரு அணிகளுக்கும் இடையே பலத்த போட்டி ஏற்பட்டது. அதில் சசிகலா அணியின் கை ஓங்கியது.

அதன்பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே தர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மனு கொடுத்தனர். இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி விசாரணை நடத்த இரு தரப்பினரையும் இன்று டெல்லிக்கு வந்து தேர்தல் கமி‌ஷனின் முழு பெஞ்ச் முன்பு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. அதை ஏற்று இரு அணியினரும் டெல்லி விரைந்தனர். இன்று காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்கியது. மாலை 5 மணி வரை இரு தரப்பினரும் வாதங்களை முன்வைத்தனர்.

இரு தரப்பு வக்கீல்களும் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே சொந்தம் என்று வாதாடினார்கள். அவர்களிடம் தலைமை தேர்தல் கமி‌ஷனர் நசீம் ஜைதி, தேர்தல் அதிகாரிகள் அச்சல் குமார் ஜோதி, ஓம் பிரகாஷ் ராவத் ஆகியோர் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

அதற்கு இரு தரப்பு வக்கீல்களும் பதில் அளித்தனர். அதோடு இரட்டை இலை சின்னம் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கோருவதற்கான ஆவணங்களையும், ஆதாரங்களையும் கொடுத்தனர்.

இந்நிலையில், அக்கட்சியின் அதிகார்வப்பூர்வமான சின்னமான இரட்டை இலையை முடக்கி வைத்து தேர்தல் ஆணையம் தற்போது உத்தரவிட்டுள்ளது. சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது குறித்து சர்ச்சை நீடிப்பதால் தற்போது சின்னத்தை யாருக்கு என்ற முடிவை எடுக்கமுடியவில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனால் வரும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணியில் உள்ள மதுசூதனன் ஆகியோர் வேறு சின்னங்களில் போட்டியிடும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

Similar News