செய்திகள்

சர்வதேச அளவில் செலவினம் குறைந்த நகரங்கள் பட்டியலில் சென்னை 6-வது இடம்

Published On 2017-03-22 03:06 GMT   |   Update On 2017-03-22 03:06 GMT
சர்வதேச அளவில், செலவினம் குறைவாக உள்ள நகரங்கள் பட்டியலில் சென்னை ஆறாவது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:

சர்வதேச அளவில், செலவினம் குறைவாக உள்ள நகரங்கள் பட்டியலில் சென்னை உள்ளிட்ட நான்கு இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் சென்னை ஆறாவது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில், குறைந்த செலவினம் உள்ள 10 நகரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை இக்கனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இக்கனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் பட்டியலில் முதல் இடத்தில் அல்மாட்டி நகரம் உள்ளது. பெங்களூரு (3), சென்னை (6), மும்பை (7) மற்றும் டெல்லி (10) ஆகிய 4 நகரங்களில் குறைந்த செலவினம் உள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ளன. கராச்சி 4-வது இடத்தில் உள்ளது. அல்ஜியர்ஸ் 5-வது இடத்திலும், கீவ் 8-வது இடத்திலும் இருக்கின்றன. பச்சாரெஸ்ட் 9-வது இடத்திலும் உள்ளது.




இந்நிலையில், அதிக செலவினம் ஏற்படுத்தும் நகரமாக சிங்கப்பூர் உருவாகி இருக்கிறது. இந்த வரிசையில் ஹாங்காங் இரண்டாவது இடத்திலும், ஜுரிச் மூன்றாவது இடத்திலும் உள்ளன. அடுத்து டோக்கியோ (4), ஒசாகா (5), சியோல் (6) மற்றும் ஜெனீவா (7) ஆகிய நகரங்கள் உள்ளன. எட்டாவது இடத்தில் பாரிஸ் உள்ளது. ஒன்பதாவது இடத்தில் நியூயார்க்கும், பத்தாவது இடத்தில் கோபன்ஹேகன் நகரமும் இருக்கின்றன.

கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் இந்திய நகரங்கள் பற்றி அண்மையில் ஓர் ஆய்வு நடைபெற்றது. தலா 10 லட்சம் டாலர் (சுமார் ரூ.6.60 கோடி) அல்லது அதற்கு அதிகமாக நிகர சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த நகரங்கள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த பட்டியலில் இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பை முதலிடத்தில் உள்ளது. இங்கு 46,000 கோடீஸ்வரர்கள் வசிக்கின்றனர். இவர்களுடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 82,000 கோடி டாலராகும். இரண்டாவது இடத்தில் டெல்லியும், மூன்றாவது இடத்தில் பெங்களூருவும் இருக்கின்றன.


Similar News