செய்திகள்

உ.பி: வாரியத்தலைவர்கள் மற்றும் ஆலோசகர்களை நீக்கி அரசு அதிரடி உத்தரவு

Published On 2017-03-20 17:32 GMT   |   Update On 2017-03-20 17:32 GMT
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முன்னாள் அரசால் நியமிக்கப்பட்ட வாரியத் தலைவர்கள், அரசு சாரா ஆலோசகர்கள், உறுப்பினர் குழு ஆகியவற்றை நீக்கி புதிய அரசு அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முன்னாள் அரசால் நியமிக்கப்பட்ட வாரியத் தலைவர்கள், அரசு சாரா ஆலோசகர்கள், உறுப்பினர் குழு ஆகியவற்றை நீக்கி புதிய அரசு அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா.ஜ.க.வின் அரசு நேற்று பதவியேற்றுக் கொண்டது. முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். அவருடன் 2 துணை முதல்-மந்திரிகள் உள்பட 46 மந்திரிகளும் பதவியேற்றனர்.

முதல் மந்திரியாக பதவியேற்றதுமே யோகி ஆதித்யநாத் தனது அதிரடி நடவடிக்கையை தொடங்கி இருக்கிறார். ஊழல் இல்லாத வெளிப்படையான அரசை நடத்த வேண்டும் என்ற திட்டத்துடன் இருக்கும் அவர் அனைத்து மந்திரிகளும் 15 நாளில் தங்களது சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்று முதல் உத்தரவில் கூறியிருக்கிறார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்த அதிரடியாக அதிகாரிகளும் 15 நாட்களில் தங்களிடம் உள்ள அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டும் என்று இன்று உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவால் நியமிக்கப்பட்டிருந்த, மாநில அரசின் கீழ் உள்ள பல்வேறு வாரியத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், அரசு சாரா ஆலோசகர்கள், சிறப்பு கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோர் நீக்கப்படுவதாக இன்று உத்தரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.

முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் மாநிலத்தின் முக்கிய அதிகாரிகளை கூட்டி ஆலோசனை நடத்திய பின்னர், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னாள் ஆளும் கட்சியான சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தலைவர்கள் மேற்கண்ட பதவிகளை வகித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News