செய்திகள்

யோகி ஆதித்யநாத் பதவியேற்ற சில மணி நேரங்களில் 2 இறைச்சிக் கூடங்களுக்கு சீல் வைப்பு

Published On 2017-03-20 16:10 GMT   |   Update On 2017-03-20 16:10 GMT
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத், முதல் மந்திரியாக பதவியேற்ற சில மணி நேரங்களில் இரண்டு இறைச்சிக் கூடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
அலகாபாத்:

உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் நேற்று பதவியேற்றார். அனைத்து மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் 15 நாளில் தங்களது சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ள ஆதித்யநாத், சட்டம் ஒழுங்கை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே, ஆதித்யநாத் பதவியேற்ற சில மணி நேரங்களில், அதாவது நேற்று இரவு இரண்டு இறைச்சி வெட்டும் கூடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவின்பேரில், அலகாபாத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட இரண்டு இறைச்சி வெட்டும் கூடங்கள் மூடப்பட்டிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார். இதேபோல் மற்றொரு இறைச்சி வெட்டும் கூடத்தை மூடவும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அது சட்டவிரோதமாக செயல்பட்டதாக புகார்கள் எதுவும் வராததால் மூடப்படவில்லை. எனினும், அதன் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

ஆட்சிக்கு வந்தால் சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை மூடப்படும் என்றும் இயந்திரமயமான இறைச்சிக் கூடங்கள்தடை செய்யப்படும் என்றும் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News