செய்திகள்

டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் வாபஸ்: பொன் ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

Published On 2017-03-20 14:57 GMT   |   Update On 2017-03-20 14:57 GMT
டெல்லியில் ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகள் இன்று தங்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.
புதுடெல்லி:

வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டம் தொடர்பாக மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு மத்திய வேளாண் மந்திரி ராதா மோகன்சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில், விவசாயக் கடனை கட்டாயப்படுத்தி வசூலிக்கக் கூடாது என வங்கிகளை அறிவுறுத்தும்படி கூறியுள்ளார். மேலும், வறட்சி நிவாரணம் தொடர்பாக உயர்மட்டக் குழுவை கூட்டவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி மார்ச் 23ல் உயர்நிலை கூட்டம் கூடுகிறது.

அதேசமயம், போராட்டம் நடத்திய விவசாயிகளை, மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, மத்திய அரசு விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்தார். இந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து ஒரு வாரமாக நடைபெற்று வந்த போராட்டத்தை விவசாயிகள் வாபஸ் பெற்றனர்.

மேலும், மத்திய மந்திரியை சந்திக்கும் வரை டெல்லியில் தங்கியிருக்க முடிவு செய்துள்ளனர்.

Similar News