செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு தடை வராது: மத்திய அரசின் உறுதியை ஏற்று தீர்மானத்தை வாபஸ் பெற்ற திருச்சி சிவா

Published On 2017-03-17 12:43 GMT   |   Update On 2017-03-17 12:43 GMT
ஜல்லிக்கட்டுக்கு தடை வராது என மத்திய அரசு உறுதி அளித்ததையடுத்து, பாராளுமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட்ட தனிநபர் தீர்மானத்தை தி.மு.க. எம்.பி. சிவா வாபஸ் பெற்றார்.
புதுடெல்லி:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மாநிலங்களவையில் இன்றைய விவாதத்தில் பங்கேற்ற தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, ஒரு தனி நபர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அவர், ‘காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டால், நாட்டு மாடுகளின் இனமே அழிந்துவிடும். எனவே, காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளையை நீக்கும் வகையில், மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்’ என வலியுறுத்தினார்.

அப்போது, ஜல்லிக்கட்டு விஷயத்தில் திருச்சி சிவா எம்.பி.யின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது.

இதையடுத்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை திருச்சி சிவா எம்.பி. திரும்ப பெற்றார்.

Similar News