செய்திகள்

மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சி: முதல்-மந்திரியாக பிரேன்சிங் பதவி ஏற்றார்

Published On 2017-03-15 08:49 GMT   |   Update On 2017-03-15 08:49 GMT
மணிப்பூர் மாநில சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜ.க.வுக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ள நிலையில் அம்மாநில முதல்-மந்திரியாக பிரேன்சிங் இன்று பிற்பகல் பதவி ஏற்றார்.
புதுடெல்லி:

மணிப்பூர் சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28 இடங்களிலும், பா.ஜனதா 21 இடங்களிலும் வெற்றி பெற்றது. நாகலாந்து மக்கள் முன்னணி 4 தொகுதியிலும், தேசிய மக்கள் கட்சி 4 தொகுதியிலும், லோக்ஜன சக்தி திரிணாமுல் காங்கிரஸ், சுயேச்சை தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.

காங்கிரசுக்கு ஆட்சி அமைக்க இன்னும் 3 இடங்களே தேவை என்ற நிலையில் சிறிய கட்சிகள் ஆதரவை பெற முடியவில்லை. அந்த கட்சிகள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தன. இதன் மூலம் பா.ஜனதாவின் பலம் 33 ஆக உயர்ந்தது.

இதைத் தொடர்ந்து தலைநகர் இம்பாலில் நடந்த பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவராக (முதல்-மந்திரியாக) தேர்வு பிரேன் சிங் செய்யப்பட்டார். கவர்னர் நஜ்மா ஹெப் துல்லாவை சந்தித்து ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலை கொடுத்து ஆட்சி அமைக்க அவர் உரிமை கோரினார்.

இதை கவர்னர் ஏற்றுக்கொண்டு பிரேன் சிங்கை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதையடுத்து, இம்பாலில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று பிற்பகல் நடைபெற்ற விழாவில் மணிப்பூர் முதல்-மந்திரியாக பிரன்சிங் பதவி ஏற்றார்.

தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த ஜாய் குமார் துணை முதல் மந்திரியாக பதவி ஏற்று கொண்டார். அவரை தொடர்ந்து இதர இலாகாக்களுக்கான மந்திரிகளும் பதவி ஏற்றனர். அவர்கள் அனைவருக்கும் கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.



வரும் 22 அல்லது 23-ந் தேதி சட்டசபையில் பா.ஜ.க. மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

வட கிழக்கு மாநிலங்களில் ஏற்கனவே அசாம், அருணாச்சலப்பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. தற்போது, மணிப்பூரில் முதல்முறையாக பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது.

மணிப்பூர் முதல் மந்திரியாக பதவி ஏற்கும் பிரேன்சிங் எல்லைப் பாதுகாப்பு படையில் வீரராக பணிபுரிந்து பின்னர் பத்திரிகையாளர் ஆனார். அதன் பிறகு அரசியலில் குதித்த அவர் ஜனநாயக புரட்சிகர மக்கள் கட்சியில் இணைந்தார். அதன் பிறகு காங்கிரசில் சேர்ந்து மந்திரியானார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்து இந்த முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து முதல்- மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Similar News