செய்திகள்

இந்திய பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கும் முகேஷ் அம்பானி

Published On 2017-03-09 03:04 GMT   |   Update On 2017-03-09 03:04 GMT
இந்திய பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் நீடிக்கிறார்.
மும்பை:

ஹூரன் ரிப்போர்ட் இந்தியா நிறுவனம் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 132 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நூறு கோடி டாலர் மற்றும் அதற்கு மேல் நிகர சொத்து மதிப்பு உடையவர்கள் ஆவர். இவர்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருக்கிறார்.



கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி அன்று பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அந்த நிலையில், 11 இந்திய மெகா கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 100 கோடி டாலருக்கும் கீழே இறங்கியது. ஆனால் முகேஷ் அம்பானி இந்த பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.1.75 லட்சம் கோடி (2,600 கோடி டாலர்) ஆகும்.

அடுத்து ரூ.1.01 லட்சம் கோடி (1,400 கோடி டாலர்) சொத்துடன் அசோக் லேலண்டு குழுமத்தின் எஸ்.பி. இந்துஜா மற்றும் குடும்பத்தினர் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

ரூ.99 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் சன் பார்மா நிறுவன தலைவர் திலீப் சாங்வி மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 22 சதவீதம் சரிவடைந்துள்ளது. சன் பார்மா நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு 18 சதவீதம் குறைந்ததே இதன் பின்னணியாகும். பலோன்ஜி மிஸ்திரி ரூ.82,700 கோடி (1,200 கோடி டாலர்) சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

Similar News